சனி, 11 அக்டோபர், 2025

எழுத்தாளர் மலரன்னை

மலரன்னை ஓர் ஈழத்து பெண் எழுத்தாளர். மூத்த புகழ் பெற்ற எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் மகள். 1950 களில் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்.1993 ஆம் ஆண்டில் இவரது முதலாவது சிறுகதை வெளியாகியது.அன்றிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவரது 250 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. " கனவுகள் நனவாகும் " என்ற தொடர்நாடகம் (நாற்பத்தி மூன்று அங்கங்கள் ) ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பத்து ஆங்கிலக் கவிதைகள் Hot spring என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. இவரது 45 இற்கும் மேற்பட்ட தனி ஆக்கங்கள் பல்வேறு திறந்தபோட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. நான்கு முறை சர்வதேச அளவில் நடை பெற்ற இலக்கிய போட்டிகளில் சிறுகதை, நாடக எழுத்துருவுக்காக பரிசு பெற்றுள்ளார். சிரித்திரன், மல்லிகை சிறுகதைப் போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். "பாலைவனத்துப்புஸ்பங்கள்" என்ற நாவல் தேசிய கலாச்சாரப்பேரவை யின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது . இலக்கிய விவரணம் எழுதுவதிற்கான பிரிவு போட்டியிலும் முதற்பரிசு பெற்றிருக்கிறார். இவரது சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும் , சில கவிதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இலக்கியப்பங்களிப்புக்காக கலைமாமணி, கலாபூசணம், கலைஞானச்சுடர் உள்ளீடாக 15 மேற்பட்ட இலக்கியவிருதுகளை பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள், நாவல் என்பன பல்கலைக்கழக மாணவர்களால் தங்களது கல்விற்காக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஓவியம், ஒளிப்படம் முதலியவற்றிலும் ஈடுபாடு உடைய இவர் நூல் பின்னல் (knyting, crocheting ), தையல்கலைகளில் சிறந்து விளங்கினார்.இவர் நூல் பின்னல், தையல் கலையை தனது தாயாரிடமிருந்தே கற்றுக்கொண்டார். இவரது மகன் மலரவனும் ஓர் எழுத்தாளர் என்பதும் மலரன்னை அவர்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதும் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்காக அமைப்பு ஒன்றிலும் அங்கத்தவராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.