திங்கள், 1 அக்டோபர், 2012

ஈழத்து நவீன இலக்கியம் - செல்லையா யோகராசா

ஈழத்து நாவல் இலக்கியத் தேட்டம் பற்றி அவதானிப்பது பயனுடையது.

ஈழத்து தமிழ் நாவல் வரலாறு சிறுகதை வரலாற்றைவிட சற்று நீண்டகாலங் கொண்டது. அது ஏறத்தாழ 115 ஆண்டுகளை உள்ளடக்கியது. ஆயினும், ஈழமக்களது வாழ்வை ஓரளவு பிரதிபலிக்கின்ற நாவல்கள் சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்தே (1916) வெளிவரத் தொடங்கின. எனினும் பிரக்ஞைபூர்வமாக ஈழமக்களது வாழ்வியல் பிரச்சினைகள் அறுபதுகள் தொடக்கமே ஈழத்து நாவல்களில் வெளிப்படுகின்றன. இவ்விதத்தில் முற்போக்கு எழுத்தாளர்களது பங்களிப்பு கவனத்திற்குரியதென்பது நாமறிந்ததே (எ-டு: இளங்கீரன், செ. கணேசலிங்கன், டானியல்).

எழுபதுகள் ஈழத்து நாவல் வளர்ச்சிப் போக்கிலே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. மலைநாடு, வன்னி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என ஈழத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து இளம் எழுத்தாளர்கள் பலர் நாவல் உலகினுள் பிரசேவித்தனர். கூடவே தத்தம் பிரதேசங்களை நாவலின் களமாக்கினர். தமிழ் நாட்டுப் படைப்புகளின் இறக்குமதித்தடையும், வீரகேசரி பத்திரிகை நன்கு திட்டமிட்டு மாதாந்த நாவல் வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்டமையும் அத்தகைய முயற்சிகள் சித்திபெற வழிவகுத்தன என்பது நாமறிந்ததே. எண்பதுகளில் இடம் பெற்ற ஈழத்து அரசியல், சமூக மாற்றங்கள் சிறுகதை போன்று நாவலில் முனைப்புப்பெறவில்லை. ஆயினும் அவ்வாறான தேசிய இனப்பிரச்சினை, புகலிட அனுபவம் பற்றிய நாவல்கள் சில வெளிவராமலில்லை.

சிறுகதை வளர்ச்சியில் கவனித்தமைபோன்று நாவலிலும் சமூக நோக்குடைய உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தி அணுகும்போது பின்வரும் நாவலாசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்:

(அ) டானியல், இளங்கீரன், செ. கணேசலிங்கன், யோ. பெனடிக்பாலன், செ. யோகநாதன், தெணியான், சுதந்திரராஜா.

(ஆ) எஸ்.பொ. (சடங்கு), செங்கைஆழியான், தெளிவத்தை ஜோசப், அருள் சுப்பிரமணியம், அ. பாலமனோகரன், தி. ஞானசேகரன், விஜயன், கோகிலம் சுப்பையா, வை. அகமத், ஷம்ஸ், திக்வெலை கமால், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மு.பொன்னம்பலம், கோகிலா மகேந்திரன், அங்கையன் கயிலாசநாதன், தியாகலிங்கம், கி.ஆ.துரை, பொ. கருணாகரமூர்த்தி, தாமரைச் செல்வி, மலரவன், கோவிந்தன், மு.தளையசிங்கம், நித்திய கீர்த்தி, பொன். கணேச மூர்த்தி.

மேற்குறிப்பிட்ட நாவலாசிரியர்களுள் சிறந்த நாவலாசிரியர்களாகத் கூறக்கூடியவர்கள் யாரென்பது பற்றி சற்றுப் பின்னர் கூறுவதே பொருத்தமானது. இதற்கு முன் நாவல் என்ற வடிவத்தின் தனித்துவமான இயல்புகள் பற்றி சற்று சுருக்கமாக நினைவுகூர்வது அவசியம்.

முன்பு சிறுகதை பற்றிக் கவனித்தபோது, அடிப்படையில் படைப்பின், உள்ளடக்கத்திற்குச் சமமாக கலையாக்க முறையும் முக்கியம் வாய்ந்ததென்பதும் அது பற்றிக் கவனத்திலெடுப்பது அவசியமென்பதும் தொடர்பாகக் கூறியுள்ள விடயங்கள் இங்கு நாவல் பற்றி அவதானிக்கும்போதும் ஏற்புடையன என்பது முதலில் விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.

அடுத்து, நாவல் என்ற வடிவத்திற்குரிய தனித்துவப் பண்புகள் பற்றி சுருக்கமாக நினைவு கூருவோம்.

இவ்விதத்தில் முதலில் குறிப்பிடத்தக்கது நாவல் வாழ்வின் முழுமையைச் சித்திரிப்பதாக அமைய வேண்டும் என்பது. இவ்விதத்தில் ஆய்வாளரொருவர் பின்வருமாறு கூறுவது கவனத்திற்குரியது:

"ருஷ்யப் பேரிலக்கியங்கள் மூலம் உலகளாவிய தளத்தில் நாவலுக்கு ஏற்பட்ட பொதுவான இலக்கணங்கள் முக்கியமானவை. முதன்மையாகக் கூறவேண்டியது, நாவல் வாழ்வின் முழுமையை சித்திரிக்க முயலவேண்டிய ஓர் இலக்கிய வடிவம் என்ற கருத்தாகும். இன்றும் உலக அளவில் பெரும்பாலான நாவலாசிரியர்கள் இக்கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. ............ படைப்பில் முழுமை இரு வகைகளில் சாத்தியமாகின்றது. ஒன்று அநுபவத்தைக் கூறுகளாகக் கண்டு அக்கூறுகளில் ஒன்றின் சாராம்சத்தை முழுமையை குறிப்பாலுணர்த்துவது. இதையே கவிதைகள் - காவியங்கள் நீங்கலாக - செய்கின்றன. சிறுகதையின் தளமும் இதுவே. இன்னொன்று அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டு பண்ண முயல்வது. இரண்டாம் வகைச் செயல்பாடுதான் நாவலுக்கு உரியது என்று ருஷ்ய பேரிலக்கியங்களில் நிறுவுகின்றன.-....."

முக்கியமான மற்றொரு பண்பு நாவல் வாழ்வின் சிக்கலை - விரிவை காட்ட முயல வேண்டுமென்பது. இத்தொடர்பில் பின்வரும் பகுதி அவதானிக்கப்படவேண்டியது:

"நாவல் ஒருமையும் குவிதலும் உள்ளதாக இருத்தலாகாது; நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைதல் வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது போன்ற விதிகள் 'போரும் அமைதியும்', 'கரமசோவ் சகோதரர்கள் போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் 'வடிவமற்ற வடிவம்'தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவுதான். பெரும் காடுபோல தழைத்து சுரமுள்ள நிலமெங்கும் பரவிநிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனப்படுகிறது. மலைகள் போல வடிவின்மையும் வடிவும் ஆக இருப்பதே நாவல் என்று வலியுறுத்தப்படுகிறது. மேற் குறிப்பிட்ட விதிகள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றையே கூறுகின்றன. அதுதான் எளிமைப்படுத்துவதாகவோ குறுக்குவதாகவோ அமையக்கூடாது. அது வாழ்வின் சிக்கலைக் காட்டக்கூடியதாகவும் விரிவைத் தொடமுயல்வதாகவும்தான் இருக்கவேண்டும்.
(ஜெயமோகன், நாவல், 1994)

ஆக, மேற்கூறியவற்றை மனங்கொண்டு அவதானிக்கும்போது, ஓரளவு தேறக்கூடியவர்களாக கோவிந்தன் (புதிய உலகம்), மலரவன் (போருலா), தேவகாந்தன் ('கனவுச் சிறை' தொடர்), டானியல் (கானல்) ஆகியோரிருப்பினும் முக்கியமான ஈழத்து நாவலாசிரியர்கள் என்று முழுத்திருப்த்தியுடன் எடுத்துக்கூறுவதற்குரிய நாவலாசிரியர்கள் ஈழத்தில் இனி வருங்காலங்களிலேயே உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பது ஜீரணிக்க வேண்டிய உண்மையாகும்.