திங்கள், 27 பிப்ரவரி, 2017

மதிப்புக்குரிய எழுத்தாளர் " மலரன்னை" அவர்கள் இன்று (26 /02 /2017 ) "கலைமாமணி " விருது பெற்றார்



மலரன்னையின் " மறையாத சூரியன்" நாவலும்,   " கீறல்"  சிறுகதைத்தொகுதியும் 4/ 3/ 2017 அன்று (கோப்பாய் பிரதேசத்தில்  ) வெளியிடப்பட்டது. மலரன்னையின் சுமார் 150 சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியுள்ளன.  நாற்பதிற்கும் அதிக வானொலிநாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளதுடன் ," கனவுகள் நனவாகும் " என்ற 43 அங்கங்களையுடைய தொடர்நாடகமும்  பலத்த வரவேற்புடன் ஒலிபரப்பாகியது குறிப்பிடத்தக்கது. இவற்றையையும்விட இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட  ஆக்கங்கள் தாயக வானொலியில் நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பாகியிருக்கின்றன குறிப்பாக பல மாவீரர் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இவரது பத்து ஆங்கிலக்கவிதைகள் " Hot spring " பத்திரிகையில் பிரசுரமாகியது. இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள் , நாடக எழுத்துருக்கள் , நாவல்) இதுவரை 32 தடவைகள் திறந்த இலக்கியப்போட்டிகளில் பரிசுபெற்றிருக்கின்றன.  

 மலரன்னை அவர்கள் இலங்கை வானொலி சிறுவர் நிகழ்ச்சிகளில் 1950 களில் தனது இளைய சகோதரி அமரர் மங்களேஸ்வரி அவர்களுடன் இணைந்து பங்குபற்றியிருக்கிறார். இவரது ஒரு கட்டுரை "கோட்டையில் ராணி" என்ற புனைப்பெயரில் 1960 /1961 ஆண்டில் விவேகி இதழில் பிரசுரமானது, இதுவே இவரது முதலாவது பிரசுரமான ஆக்கம் ஆகும். நீண்ட இடைவேளைக்குப்பின் இவரது முதலாவது சிறுகதை 1993 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரமாகியது.   

மலரன்னை , அறியப்பட்ட எழுத்தாளர், இவர் தனது ஆரம்பக்கல்வியை (முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டுவரை) மலையகப்பாடசாலையொன்றில் கற்றார் , இவரது பாடசாலை ஆசிரியையாக இவரது தாயாரே இருந்தார். பாடசாலையின் பொறுப்பாசிரியராக இவரது தந்தையாரே இருந்தார். ஆறாம் வகுப்புக்கல்வியை சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயத்திலும் பின் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும்  உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் யாழ் இந்து மகளீர் கல்லூரியிலும் கற்றார். தேசிய ஹோமியோபதி கல்விநிறுவனத்தில் ஹோமியோபதி மருத்துவ பட்டயக்கல்வியை பூர்த்தி செய்தார். தனது கணவருடன் இணைந்து முல்லைத்தீவு தண்ணீரூற்றில் இயங்கிய நாகபூசணி மருத்துவநிலையத்தில் (தனியார்) மருத்துவராக பணியாற்றினார்.  பிற்காலங்களில் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்கான அமைப்பு ஒன்றில்  அங்கத்தவராக இருந்தார்.