வெள்ளி, 8 செப்டம்பர், 2023

செல்லையா செல்வரட்ணம்

 வாழ்வின் தடங்கள்


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வட இலங்கையின் யாழ்ப்பாண நன்நகரில் நீராவியடி பெரியபுலத்தை  பூர்வீகமாய் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்லையா, காங்கேசன்துறையை பூர்வீகமாகவும் கோப்பாய் இருப்பாலையை வாழ்விடமாகவும் கொண்ட கந்தையா செல்லம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாக செல்வரட்ணம் அவர்கள் 1943 ஆம் ஆண்டு மாசிமாதம் 13 ஆம் திகதி பிறந்தார். 

செல்லையா  செல்லம்மா தம்பதிகளுக்கு மூத்தபிள்ளையாக ருக்மணி எனும் பெண்பிள்ளையும், இரண்டாவதாக மங்கயற்கரசி எனும் பெண்பிள்ளையும் இருந்தனர். முதல் இருவரும் பெண்பிள்ளைகள் என்பதால் இவர்கள் இருவரும் இறைவனிடம் வேண்டி பெற்ற ஆண்பிள்ளையே செல்வரட்ணம் அவர்கள் , அவர்கள் அவரை செல்லமாக செல்வம் என்று அழைத்தனர். இவரின் பின்னாக  நடராசா (தேவா), வரதராஜா (வரதா) இரட்டையர்களான சசிதரன் ஸ்ரீதரனும் பிறந்தனர், ஆண்கள் ஐவரும் பஞ்சபாண்டவர்கள் போன்று இருந்தனர். பிள்ளைகள் எழுவரும் ஒருவருடன் ஒருவர் மிகுந்த அன்பாகவும் நெருக்கமாகவும் இருந்தனர். 

இவரது தந்தையார் ஒரு முருகபக்தர், தினமும் நல்லூரானை தரிசித்துவருவார். வேலைமுடிந்து வீட்டுக்குவர இரவானாலும் வந்து தான் சாப்பிடமுன் பிள்ளைகளை எழுப்பி தான் குழைத்த உணவை ஒவ்வொரு வாய் பிள்ளைகளுக்கு தீத்திவிட்டுத்தான் அவர் உணவருந்துவார். பிள்ளைகளை தாயும் தந்தையும் பொருளாதார வசதிகள் குறைவான போதும் மிகுந்த பாசத்தோடு வளர்த்தார்கள். இவர்கள் தங்கள் குடும்ப சொத்தாய் அன்பைத்தான் வைத்திருந்தார்கள்.     

செல்வரட்ணம் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை கோப்பாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் பின்னர் உயர்கல்வியை யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி பாடசாலையிலும் கற்றார். இவர் தனது பெற்றோர்கள், சிறியதாய்மார்களான, ஆசையம்மா, பூஅம்மா, மாமன்மார்களான தியாகராசா, சின்னத்துரை என்போருடனும் மிகுந்த அன்பாக இருந்தார். குறிப்பிட்ட காலத்தின் பின்பு இருபாலையை விட்டு காங்கேசன்துறையில் குடியேறினார்கள்.

பாடசாலை காலம் முடிந்ததும் யாழ் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லுரியில் இணைந்து மின்  தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்தார். 1965 ஆம்  ஆண்டு பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தில் மின் இணைப்பாளராக பணியில் இணைந்துகொண்டார்.  பணிக்காலத்தில் மேலதிக சேவைக்கால   பயிற்சியை கொழும்பில் பெற்றுவந்தார் .  இவரது பணியின் சிறப்பு காரணமாக மின் பொறுப்பினர் என்ற பதவிற்கு உயர்த்தப்பட்டார்.  

1968 ஆம் ஆண்டில் செல்வரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ,வட்டக்கச்சி, இராமநாதபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம், செல்லாச்சி தம்பதிகளின் இளைய மகளாலான  கிருஸ்ணாதேவியை திருமணம் செய்துகொண்டதின் பயனாக ராஜசெல்வி ,சேரலதன் ,றம்மியா  என்ற மூன்று முத்துக்களை பெற்றார். 1978 ஆம் ஆண்டளவில் பரந்தன் இரசாயன தொழிசாலை  விடுதியில் குடியேறினார்கள். அதற்கு முற்பட்ட  காலத்தில்  வட்டகச்சியில் இருந்து வேலைக்கு வந்துபோவார் ,அங்கு மிளகாய் தோட்டத்துடன், நெல் வேளாண்மையும் செய்தார். அந்தக்காலத்தில் தனது சகோதரர்கள்  தேவா, வரதா, சசி .சிறி ஆகியோருக்கு எதிர்காலத்திற்கான நல்வழியை ஏற்படுத்த முயன்றார். அவர்களுக்கு மட்டுமல்ல உறவினர்கள் ,ஊரார்களுக்கும்  நல்ல வழிகாட்டியாக இருந்தார் , இவரின் மைத்துனர் மகனான சிறியின் உயர்ச்சிலும் கண்ணாக இருந்தார் ,

இவர் பிள்ளைகளுடன் மிகுந்த பாசம்உடையவர்  அதேநேரம் மிகுந்த கண்டிப்புடையவர் .பிள்ளைகள் நல்ல பண்புள்ளவராவும் ,ஆற்றல் உள்ளவராகவும் , நிறைந்த கல்வி பெறவேண்டும் என்பதற்காக இவரும் மனைவியும் அயராது பாடுபட்டனர். அவர்கள் கல்வியில்  தடங்கல் வராமல் இருக்க வேண்டும் என்று மிகுந்த கவனமாக இருந்தார்கள் .இதன்பயனாக மூத்த மகளான ராஜசெல்வி உயிரியல் பட்டதாரியாகவும் ,மகன் சேரலதன் பொறியியலாளராகவும் ,இளைய மகள் றம்மியா  விவசாய பட்டதாரியாகவும் ஆனார்கள். 

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில்  வேலை செய்து கொண்டிருந்த போது மனைவியை மின் இணைப்பு ஒப்பந்தகாரராக அரச விதிப்படி பதிவு செய்து கிளிமாவட்டத்தில்  பிரபலமான மின் ஒப்பந்தகாரராக  விளங்கினார்கள். அந்தக்காலத்தில் கிளிநொச்சியின் பிரதான மின் இணைப்பு ஒப்பந்தங்களை இவர்களே செய்தார்கள், இவற்றுள் கிளிநொச்சியில் ஆரம்பமான விவசாய பீடம், விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பனவும் அடங்கும்.  

1985  ஆம் ஆண்டளவில் கிளிநொச்சி கரடிப்போக்கில் A-9 வீதியில் காணி வாங்கி,  திருத்தி கட்டிடம்  கட்டி அதில் “ கிருஷ்ணா எலக்ரிக்கல் வெர்க்ஸ்சொப்”  என்ற நிறுவனத்தை நடத்தினார். இந்நிறுவனத்தில் பலருக்கு வேலை வழங்கி, தகுந்த பயிற்சியையும்   பெற்றுக்கொடுத்தார்.  அதேகாலத்தில்  கிளிநொச்சி கல்விப்பணிமனையின்  முறைசாரா கல்விப்பிரிவில்  மின் போதனாசிரியராகவும் பணி புரிந்தார்.

 1990 களில் நாட்டின் சூழ்நிலை காரணமாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் இயங்கவில்லை.  மின் பொறியிலாளர் சிவபாதசுந்தரம் ஐயா அவர்களுடன் இணைந்து கிளிநொச்சியில் MMB கட்டிடத்தில் ரம்யா மைதிலி களஞ்சியம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர். இக்களஞ்சியத்தில் திரு தம்பையா ஐயா, திரு இரட்ணம் ஐயா ஆகியோருடன்  உதவியாளர்களாய் ஜெகதீசன், சுரேஷ் ஆகியோரும் பணியாற்றினர். 

அந்த காலத்தில் தன்னை சமய சமூக பணிகளில் இணைத்துக்கொண்டார். இவர் கோயில்களில் தேவாரம், திருவாசகம் ஓதுவதில் வல்லவராக இருந்தார், இதனை செவ்வனவே செய்வதற்காக ஓதுவார் பரீட்சையில் தோற்றி சித்தியடையந்தார்.  2000 ஆண்டுகளில் பரந்தன் சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாவிஷேகம் நடைபெறும்போது அதற்குரிய பாடல்களை கண்டாவளை கவிராயர் இயற்றியிருந்தார், எல்லாப்பாடல்களையும் இவரே கும்பாவிஷேகம் அன்று பாடி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.      

எப்போதும் இவருக்கு பக்க பலமாக இவரது மைத்துனரும் பிரபல வர்த்தகருமான முத்துலிங்கம் உறுதுணையாக இருந்தார் . இவரது மைத்துனரும் பிரபல வவுனியா வர்த்தகருமான கந்தசாமி உடனும் மிகுந்த அன்புறவாக இருந்தார்.

1996 களில் மீண்டும் இடப்பெயர்வால் கந்தபுரம் நகரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது ,அங்கு ரம்யா மைதிலி களஞ்சியத்தை மிகுந்த கடினங்களுக்கு மத்தியில் நகர்த்தி நடத்திவந்தார். கந்தபுரத்திலும் சமூக ,சமய பணி களுடன், காலத்தின் தேவை கருதிய தேசப்பணிகளையும் சீருடன் செய்தார். இவர் எப்போதும் ஒரே கொள்கையோடு ஆர்ப்பாட்டமற்றவராய் வாழ்ந்து வந்தவர்.

இவரது மகள் ராஜசெல்வி உயிரியல் பட்டதாரி ஆசிரியராக கடமை புரிந்ததை எண்ணி பெருமையடைந்தார், மருத்துவர் சுஜந்தன் அவர்களை தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து ,அவர்களின் குழந்தைகளான விஜிந்தா ,சுஜிந்தா இருவருடனும் சந்தோசமாக காலத்தை கழித்தார். பொறியாளராக கடமை புரிந்த மகனான சேரலாதனுக்கும்  அரச உத்தியோகத்தில் இருந்த சத்யபிரியாவை திருமணம் செய்து வைத்து அவர்களின் மகனான சாருக்சனை கண்டு அகம் பூரித்தார்.

நாட்டின் சூழ்நிலை காரணமாக ஒரு இடமும் போய்வர முடியாத சூழ்நிலையில் தான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெரியக்காவின் இறப்பினை 10  நாட்களுக்கு பின்பே அறிந்து மிகவும் துவண்டு போனார்.

2001 ஆம் ஆண்டு மீண்டும் கிளிநொச்சியில் குடும்பத்துடன் மீள்குடியேறினார். திரும்பவும் அவரது சொந்தக்கடையாக செந்தூரன் இரும்புக்களஞ்சியம் கிளிநொச்சியில் மிளிர்ந்தது. அவருடைய மனைவி கடையின் நிர்வாகத்தில் பக்க பலமாக இருந்தமையால் ,மீண்டும் அதிக நேரத்தை சமூக ,சமய சேவைகளிலும் , தேசப் பணிகளிலும் பயன்படுத்தினர். அதேகாலத்திலே மீண்டும் இரட்டைசகோதரர்களில் ஒருவரை இழந்த செய்தி லண்டனில் இருந்து  கிடைத்தது, அதனால் மிகுந்த வேதனை அடைந்தார். இவருக்கு அருகில் தம்பி தேவா இருந்தது ஓரளவு ஆறுதலாக இருந்தது.

2004 ஆம் ஆண்டு இன்னுமொரு பேரக்குழந்தை சாயிஜாவை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் .பேரக்குழந்தைகளுடன் மிகுந்த பாசமாக இருந்தார் .

2007 ஆம் ஆண்டு  தனது இளைய மகளான றம்மியா  கிளிநொச்சி கச்சேரியில் காணி திட்டமிடல்  அலுவலராக கடமை புரிந்த காலத்தில், விவசாய பட்டதாரியும்  CARE  நிறுவன இணைப்பாளருமான குமாரசாமி ஐங்கரனை திருமணம் முடித்துவைத்து மகிழ்ந்தார். இவர்களின் குழந்தையாக அபிநயன் 2008 ஆம் ஆண்டு வந்துதித்தார்.இவருடனும் மிகுந்த அன்புடன் வாழ்ந்துவரும் காலத்தில் மீண்டும் இடப்பெயர்வு ,எல்லாவற்றையும் இழந்து தனது மைத்துனர் ,சகோதரி ,சகோதரரன் உடன் பல தடைகளை கடந்து கால்கடுக்க நடந்து செட்டிகுளமுகாமில் இருந்தார். அதில் இருந்து விடுபட்டு தனது  அக்காவின் மகளான மருமகள் ரஜூலா  வல்லிபுர நாதன்  வவுனியா தாதியர் கல்லுரி அதிபருட ன் தங்கியிருந்தார் ,பின்பு மீண்டும் மீள்குடியமர்வில் கிளிநொச்சில் வந்து மீளவும் தனது காணியை திருத்தி குடியேறினர், அப்போது   மைத்துனர் முத்துலிங்கம் அவர்களின் இழப்பு இவருக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது .

அந்தக்காலத்தில் நாட்டின் சூழ்நிலைகளால் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நீண்ட தூர தேசம்  சென்றமையால் மிகவும் கவலைப்படிருந்தார் ,இருந்தும் சமய ,சமூக பணிகளில்  மனைவியையும் இணைத்து செயற்பட்டார் .அடிக்கொரு தடவை யாழ் சென்று சொந்தங்களுடன் சந்தோசமாக இருந்தார் . மகன் அடிக்கொரு தடவை வந்து போவார் ,அப்போது சுயமாக உழைக்க வேண்டும் என்று பரந்தன் சிவகுரு மோட்டார்ஸ் நிறுவனத்தில் முகாமையாளராய் வேலை செய்தார். 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வேலை முடிந்து காரினை ஓடிவந்தவர், காரிலிருந்து இறங்கமுடியாமல் போய்விட்டார்.     

உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டு யாழ் அனுப்பி வைக்கப்பட்டார். மருமகள் ரஜூலாவும் ,பெறாமகன் கிரிஷாந்த்தும் கொழும்பு வரை கொண்டு சென்று சிகிச்சை அள்ளித்தார்கள், ஆனால் அவரை நடக்க செய்ய முடியவில்லை . இவரை எழுப்பி நடக்க வைக்க வேண்டும் என்று இவரது மருமகனின் தம்பியான  மருத்துவர் ரெஜிந்தன் முயற்சி செய்து பார்த்தார் அப்போது சந்தோசமாக இருந்தார் ,ஆனால் அவரின் உடல் நிலை காரணமாக சிகிச்சையை தொடர முடியவில்லை. இது இவரின் மனதில் மிகுந்த கவலையை அளித்தது. பின்பு சிறிதுகாலத்தில் படுக்கை புண் வந்துவிட்டது, திரும்பவும் பல மாதங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திருந்தும் இவரது அக்காவின்  கந்தர்மட வீட்டில் வைத்திருந்தும் மருமகள் ரஜூலா,பபி பார்த்து சுகப்படுத்தினார்கள் ,மகனும் ,குமாரும் நல்ல உதவியாக இருந்தனர்.

மீண்டும் கிளிநொச்சியில் வந்து குடியேறினார்கள். மகள் ரம்மியாவும் பிள்ளைகளான அபிநயனும் ,கஜானனனும் வந்து அருகில் நின்றனர். மூன்றுதடவைகள் வந்து பார்த்து தேவையானவற்றை ஒழுங்குசெய்து போனார்கள். மகனும் , காந்தனும்(உதவிக்கு நிற்கும் பையன்)  அவரை பார்த்தனர். தாதிய உத்தியோகத்தரான பெறாமகன் சுதன் அவருக்கு தேவையான உதவிகளை வழங்கி வந்தார் ,அவரின் அக்கா மங்கை அவர்கள் லண்டனில் இருந்து வந்து இவருடன் தங்கி நின்று பார்த்தார். மிகுதி ஆறு வருடங்களும் மனைவி தேவி எந்தக்குறையும் இல்லாது காந்தனின் உதவியுடனும், மருத்துவர்களின்  ஆலோசனையுடனும்,சுதன், மகனின் உதவியுடனும் , தன்னுடய  உடல்நிலையை பாராமல் மிகுந்த அன்புடன் பார்த்து வந்தார். 

சென்றவருடம் மூத்தமகள் பிள்ளைகளை கண்டு மிகுந்த சந்தோசம் அடைந்தார் மருமகன் ஐங்கரனின் சகோதரி ஜெயகௌரியும்  அவரது கணவரும் அவருக்கு பிறந்த நாளில்  கேக் வாங்கி வெட்டி அவரை  மகிழ்விப்பார்கள். மருமகள் ரஜூலா வல்லிபுரநாதன் அவர்கள் பணிப்பாளராக  (தாதிய கல்வி) சுகாதார அமைச்சு, இலங்கை  கடமை ஏற்றதை எண்ணி மனம் பூரிப்படைந்தார். இவர் சகோதரன் மகளான கிரிஜாவுடன் மிகுந்த அன்புடையவர் ,  கிரிஜாவிற்கு அரசாங்க வேலை ஒன்று கிடைக்க வேணும் என்று மிகுந்த அவா  கொண்டிருந்தார். ஆசிரியர் தொழில் கிடைத்தவுடன் மிகுந்த சந்தோசம் அடைந்தார்.  இவரது சகோதரர்களின் பிள்ளைகளின் கல்வி, தொழில் வளர்ச்சிகளில் மிகுந்த திருப்தி அடைந்திருந்தார். 

 இவரின் சகோதரர்களின் பிள்ளைகளான கிருபா, பிரபா ,பிரேமா ,சுதா,ராஜலதன்,இந்திரன் ,ராஜி ,சோபியா ,கனித்தா, துஷி, சுதா  குடும்பமாகவும் ,மைத்துனரின் பிள்ளைகளான ஸ்ரீ, சாந்தி, ராஜன்,ரஞ்சனா,பேபி  குடும்பங்கள்,  நண்பர்களின் குடும்பங்கள்  வெளிநாட்டில் இருந்து வந்து இவரை சென்று பார்க்கும் போது அவரின்   மனம் அளவிட முடியாத ஆனந்தம்  அடைந்திருந்தது. தனது மருமக்களான ரஜூலா, பபி, ஆகியோரின் ஒவ்வொரு வருகையின் போதும் அவர் புத்துணர்ச்சி பெற்றார். இவரது தம்பிகளான  தேவாவும் வரதாவும் அடிக்கொருதடவை வந்து பார்த்து போவார்கள் அது அவரது  மனதுக்கு இதமாக இருக்கும். இவரது மைத்துனர் , மலர் அக்கா, மருமகன் பாபு ஆகியோர் வவுனியாவில் இருந்து வந்து ஆறுதல் தந்து போவார்கள்.          

படுக்கையில் இருந்தபோதும் பரந்தன் இரசாயன தொழிசாலை பிள்ளயாரிடம் போய்வந்தார் , கோயில் சம்பந்தமான  ஆலோசனைகள்  கூறிவந்தார் , இவர் சார்த்த சமூக தொண்டுணர்கள் பலர் இவரின் ஆலோசனைகளை கேட்டுப்போவார்கள், அதன் பொது சந்தோசமாக இருப்பார்,,காரணம் இப்படியான சூழ்நிலையிலும் தன்னால் உதவ முடிகிறது என்பதில் தான்.

மருமகன் ஐங்கரனின் அம்மா இவர்களுக்கு மிகுந்த உதவியும் ஒத்திசையுமாக இருந்தார். பேரப்பிள்ளைகள் பல்கலை கழக கற்கை நெறிக்கு தெரிவானதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பேரன் சாருக்சனின் க பொ த சாதாரணதரத்தின் சிறந்த பெறுபேறினைஅறிந்து மனம் மகிழ்தார் , சாயிஜாவின் தேவாரப்பாடலில் லயித்து இருந்தார் ,அபி ,கஜி இன் கதைகளை கேட்டு ரசித்து வாழ்ந்தார்.

கிளிநொச்சி மண்ணுக்கு அவர் எப்போதும் நன்றியுடையவராய் இருந்தார் அதனால் தனது பிள்ளைகள் கிளிநொச்சி மண்ணில் தொடர்ந்து வேலை செய்யவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது.

 2020 ஆம்  ஆண்டு மாசிமாதம் சகோதரி கமலா முத்துலிங்கத்தின் இழப்பு மிகுந்த  தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது . அவவின் இறப்பின் பின்பு ஒருமாதமும் அங்கு நின்று அவவின் கடமைகளை மனைவியுடன் சேர்ந்து செய்தார். இதன் பின் படிப்படியாக உடல் நிலை தளர ஆரம்பித்தது .அத்துடன் சகோதரி மங்கயற்கரசியின்  உடல் நிலை மோசமடைந்ததை எண்ணி மிக வருத்தம் அடைந்தார் .மைத்துனர் கந்தசாமி உடல் நிலையறிந்து கவலை அடைந்து இருந்தார் .இருந்தும் கந்தசாமி கோவில் தேர் வெள்ளோட்டத்தை நண்பன் ரட்ணத்துடன் சென்று பார்த்து வந்தார் . மனதில் கவலைகள் கூடவும் பேசும் திறன் குறைந்தது ,மேலும் உணவு, மருந்தை விழுங்க பின்னடித்தார்.   

புனித மாதமான கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி கௌரி விரத நாளில் ,கந்தசட்டிக்கு அண்மித்த காலத்தில்  எல்லோரும் திகைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் பாதக் கமலம் அடைந்தார் .அன்னாரின் இழப்பு அவரது  குடும்பத்திட்கும், கிளிநொச்சி மண்ணுக்கும்   இழப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை .


ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி