செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கப்டன் மலரவன்

போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. 

கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், 'நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை' என பதிவு செய்துள்ளார். 

எழுத்துக்களுடன் வாழ்ந்த மலரவனின் படைப்புகள், அவரது வீரச்சாவிற்குப்பின் வெளியீடுகளாக வெளிவந்தன. அவற்றில் போர் உலா என்னும் படைப்பு இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான தேர்வில் முதல் பரிசு பெற்றமை அவரது படைப்பாளுமையின் தரத்தைச் சான்று பகர்ந்து நிற்கின்றது. மேலும், எனது கல்லறையில் தூவுங்கள் (சிறுகதை,கவிதைகளின் தொகுப்பு), மலரவனின் ஹைக்கூ கவிதைகள் (இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்), புயல் பறவை (நாவல்-வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிவு பெற்றது) என படைப்புகள் பல. இவை அத்தனையும் தனது இருபது வயதிற்குள் எழுதி முடித்தவர்.

ஒவ்வொரு போராளியும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுகிறான், உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படுகிறான் என்பதற்கு கப்டன் மலரவனின் வாழ்க்கையும் அதன் பின்னணியும் மிகச் சிறந்த சான்று. மலரவனின் தந்தை ஒரு வைத்தியர். கொழும்பில் வெடித்த 1958ம் ஆண்டு இனக்கலவரத்தில் சிக்குண்ட அவர் கடை ஒன்றுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியிருந்தார். அங்கும் வந்து அவரைத்தாக்க முற்பட்ட சிங்களக்காடையர்களை சோடாப்போத்தில்களால் தாக்கி விரட்டியடித்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். பின்னர் 1977ம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது சிங்கள வைத்திய நிர்வாகம் தமிழ் வைத்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்துத் தனது வேலையை இராஐpனாமா செய்துவிட்டு, மாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1985ம் ஆண்டு கொக்கிளாய் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளான போது போராளிகளுக்கான வைத்தியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கை, வவுனியாவில் எல் 3 எடுத்த தாக்குதல் என பல தாக்குதல்களின் போது களமுனை வைத்தியராக, காயமடைந்து வந்த  போராளிகளிற்குக் களத்திற்கு நெருக்கமாக நின்று சிகிச்சையளித்த ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மலரவனின் மற்றுமொரு அண்ணன்; மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டு, தியாகி திலீபன் அவர்களுடன் தொடங்கி விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தார். தேசப்பற்றுக் கொண்ட அக்குடும்பத்தின் புறச்சூழல்கள் சிறுவயதிலிருந்தே மலரவனுக்குள் விடுதலைத்தீயை வளர்க்கத்தொடங்கின.

யாழ்ப்பாணத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான சென் ஜோன்ஸ் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணவனாக விளங்கிய அவர், உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் முதலாவது வருடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் முதல் மாணவனாகத் தேர்வாகியிருந்தார்.  அந்த வேளையில்தான், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிங்கள அரசுடனான போர் முழு வீச்சில் தொடங்கியது. மலரவன், தனது கல்வியைத் துறந்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். மணியந்தோட்டம் பயிற்சி முகாமில் தனக்கான அடிப்படைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.
  
பயிற்சியை முடித்த பின், பசீலன் மோட்டார் பிரிவில் ஒரு மோட்டார் அணியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டு மீண்டும் அதற்கான பயிற்சியை தொடங்குகின்றார். 1990களில் சண்டையின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான பணி பசீலன் அணியையே சார்ந்திருந்தது. அந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. அவற்றைக் கையாளுவதற்கும்; துல்லியமான சூட்டை வழங்குவதற்கும் துல்லியமான கணிப்பீடுகள் மிகமுக்கியமானவை. அந்தப் கணிப்பீட்டுப் பணியிலும் அதனை நேர்த்தியாக இயக்குவதிலும் பெரும்பங்கு மலரவனுக்கு உண்டு. அதற்காகக் கடுமையாக உழைத்தார். பீரங்கிகளின் வேகத்தையும் தூரத்தையும் கணிப்பது தொடர்பில் கணிதத்தில் உள்ள விதிமுறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு செல்லின் நிறையையும் கணித்து ஒவ்வொன்றும் என்ன வாசிப்பில் விட்டு செலுத்தினால் அது இலக்கைத் தாக்கும் என்பதைப்பற்றிய கணிப்பீடுகளில் தனது நேரத்தை செலவிட்டுத் துல்லியமாகக் கணித்தார். அதற்கும் மேலாக, ஏனைய மோட்டார் அணியின், எத்தரத்திலுள்ள வீரர்களிற்கும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தது.

தனக்கு தரப்படும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அதை புதிய பரிமாணத்தில் அல்லது கோணத்தல் பார்க்கும் திறனும் அதைப்பற்றி மென்மேலும் சுயமாக அறிந்து மெருகேற்றும் திறனும் அவரை சிறந்த செயல்திறன்மிக்க போராளியாக இனங்காட்டியது. அதுவே குறுகிய காலத்தில் பசீலன் மோட்டார் பிரிவின் உதவிப் பொறுப்பாளர் என்னும் நிலைக்கு அவரை உயர வைத்தது. 

யாழ்கோட்டையில் இருந்து இராணுவம் தப்பியோடியது என்றால் அதன்பின்னணியில் பிரதானமான பங்கை வகித்தது பசீலன் படையணி. அந்தக்களமுனை தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, காரைநகர், ஆனையிறவு, மின்னல் என பல களமுனைகளில் வெற்றிகளில் பசீலன் மோட்டாருடன் பங்கு கொண்ட மலரவனின் பங்குகள் பெறுமதியானவை. 
சிங்களப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிங்களப்படைக்கு புளியைக் கரைப்பது பசீலன் செல்கள் என்பதனால் பசீலன் செல் அடிக்கப்படும் போது வெளிவரும் வெளிச்சத்தை கணிப்பிட்டு அப்பகுதியை நோக்கி கடுமையான செல்தாக்குதலை நடாத்தி பசீலன் தாக்குதலைக் கட்டுப்படுத்த சிங்களப்படை முயற்சிப்பது வழமை. அவ்வாறான சமயங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான செல்த்தாக்குதல்களின் மத்தியிலும் இயல்பாகவும் தெளிவாகவும் செயற்படும் அவரது துணிச்சல் மற்றைய போராளிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்றைக்கும் சோர்ந்து போனதில்லை.

சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போது வெட்டவெளியில் விமானக் குண்டு வீச்சுக்களின் மத்தியில் எவ்வித தடையரண்களும் இல்லாமல் முகாமிற்கு நேருக்கு நேரே பசீலனை வைத்துப் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அவர், செல் தாக்குதலில் காயப்பட்டு மரணத்தின் வாசல் வரை எட்டிப்பார்த்து, களமருத்துவமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணனின் கரங்களுக்குச் சென்று மீண்டுவந்தார்.

ஆ.க.வெ சமரில் ஆனையிறவு பிரதான முகாம் தாக்கியழிப்பில் பசீலன் மோட்டார் அணிக்குத் தலைமைதாங்கி, முகாமின் மையத்திலிருந்த கோபுரத்தைத் தனது துல்லியமான கணிப்பால் தகர்த்து விழுத்தி தனிமுத்திரையைப் பதித்தார். இத்தாக்குதலில் இவரது தந்தையும் அண்ணனும் களமுனை மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். இத்தாக்குதல் மட்டுமன்றி, மணலாற்றில் நடைபெற்ற மின்னல் எதிர்த்தாக்குதலிலும் குடும்பத்தில் மூன்று பேரும் பங்காற்றியது என்பது விடுதலைப் போராட்டத்தில் இக்குடும்பத்தின் பங்களிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.

பசீலன் படையணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபின்னர் யாழ்மாவட்டத்தின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து தனது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தயிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி முந்நகர்த்தியதில் பெரும் பங்கு மலரவனுக்குண்டு. அவை, சமூகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையின் கல்வி மீதும் அவர் கொண்ட தாகத்தின் வெளிப்பாடாக விளங்கின.

பின்னர் யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பணியாற்றினார். குறிப்பாக மாவட்ட இராணுவ அறிக்கைப் பொறுப்பாளராக இருந்தார். இதன்போது ஒவ்வொரு சண்டையிலும் பங்குபற்றுபவர்களிடம் சண்டையில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து சண்டை எவ்வாறு நடந்தது, அதில் திறமையாக செயற்பட்டவர்கள், திட்டத்தில் ஏற்பட்ட சரி பிழைகள், அடுத்த சண்டையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்ற ஒரு மதிப்பீட்டு இராணுவ அறிக்கையை செய்து, தளபதிக்கு சரியான நிலவரத்தைப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார். 

அக்காலப்பகுதியில், தெல்லிப்பளையில் வேவு நடவடிக்கை ஒன்றிற்காக பணியாற்றிக் கொண்டிருந்தவேளை எதிரியின் பதுங்கித்தாக்குதலில் வேவுப் பொறுப்பாளர் காயமடைந்தபோதும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு காயமடைந்தவரை கொண்டுவந்து சேர்த்தார். இது அவரது ஓர்மத்திற்கு எடுத்துக்காட்டு. 

அந்தநேரத்தில்தான் 1992ம் ஆண்டு பலாலி வளலாய் தாக்குதலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் சு.ப.தமிழ்க்செல்வன் அவர்களின் பகுதித் தாக்குதல் தொடர்பான சகலவிடயங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதுதொடர்பான விடயங்களை தளபதியுடன் பரிமாறும் வேலைகள் உட்பட தாக்குதலுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளில் தளபதிக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டார். 

எப்போதும் சண்டை நேரங்களில் மலரவணை கட்டுப்படுத்துவது கடினம். சண்டை தொடங்கினால் உடனே அங்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோலத்தான், அன்றைக்கும் சண்டை தொடங்கும்வரை தளபதியுடன் நின்ற மலரவனை திடீரெனக் காணவில்லை. தளபதி கோபத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில், களமுனைப்பகுதிக்குச் சென்று நிலமைகளை அவதானித்துவிட்டு தன்னால் இயன்றளவு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்த சேர்ந்த மலரவனைப் பார்த்த தளபதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு பொறுமையானார். நெகிழ்வாக, தன்னுடன் நின்று சிலவேலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மேலும் சீற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்த மலரவன் அவர் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். 

தாக்குதலில் பலத்த இழப்புகளைச் சந்தித்த இராணுவம், புலிகளுக்கு இழப்புகளைக் கொடுக்கும் நோக்குடன் பின்தளப்பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து வெடித்த மூன்று செல்களில் மலரவன் படுகாயமடைந்தார். அந்த இறுக்கமான நிமிடங்களை நினைவு கூர்ந்த தளபதி 'காயப்பட்டவுடன் களமருத்துவனைக்கு அவசரமாக அனுப்பினோம். என்னோடு நின்ற ஒருவர் வந்து மலரவனுக்கு கொஞ்சம் கடுமையாக உள்ளது, கால்துண்டாடப்பட்டுவிட்டது என்று கூறினார். கால் கழற்றினாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் அவன் இன்னும் எவ்வளவோ சாதனைகளைப் படைப்பான என்;று என் உள்ளுணர்வு அடிக்கடி வேண்டிக்கொள்கின்றது. ஏனெனில் பல நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருசிலர், இப்படியான நிலையிலும் அபரிமிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்பார்கள். அந்த வரிசையில் மலரவனும் ஒருவன் என்று நன்றாகத் தெரியும். இவ்வேளையில் எமக்கு அடுத்த களமுனையில் மலரவனது அண்ணன் - அவர் மேல் உயிரையே வைத்திருந்த சகோதரன் - வைத்திய கலாநிதியும் போராளியுமான அவர், எமது மருத்துவமனையில் நின்று பல போராளிகளின் உயிர்களைக் காக்கும் கடமையில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்....... தாக்குதல்கள் முடிந்து எம் நிலைகளுக்கு நாம் வருகின்றபொழுது எங்கள் உள்ளத்தை உருகவைக்கும் பேரதிர்ச்சி தரும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள்' என்று அந்தக் கணங்களை விவரித்தார். போர்க்களத்தில் ஆயுதங்களுடன் மட்டுமன்றி பேனாவுடனும் சுழன்று கொண்டிருந்த அந்த வீரன் மண்ணுக்காக வித்தாகி விட்டான். அதேவேளை, அவரது அண்ணன் அதிகாலை மூன்று மணிக்கு தம்பியின் வீரச்சாவுச் செய்தியை அறிந்திருந்த வேளையிலும் தொடர்ந்து அங்கு காயமடைந்து வந்துகொண்டிருந்த போராளிகளிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

மலரவன் என்னும் ஒரு போராளியை தமிழன்னை அவரைப் பெற்ற மலரன்னையிடம் இருந்து பறித்து எடுத்துவிட்டாள். அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை செய்தது. தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில்

மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! - இன்று
விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய்
விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே - இன்று
கதையாகி விட்டதே உன் சரிதை.

இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும்
அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் - இந்த
மண்ணின் விடியலே உன் கனவு – நீ
விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை!

மேலும் 'மலரவனிடத்தில் குறுகியகால அனுபவத்திற்குள்ளேயே அவனிடம் ஓர் தளபதிக்கே உரித்தான திட்டமிடும் ஆற்றலைப் பார்த்தேன். அவன் கதைப்பது மிகவும் குறைவு. இதை செயல் வடிவம் நிறைவுபடுத்திற்று. இது எங்கள் தலைவரிடம் இருக்கும் தனித்துவமான ஒர் உயர்ந்த தன்மை' என சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிவு செய்கின்றார்.

ஒற்றைவரியில் மலரவன் - போர்வீரன், வேவுப்போராளி, சிந்தனையாளன், தனக்குத் தரும் பணியை மெருகேற்றும் முயற்சியாளன், களத்தின் தேவையை விளங்கிச் சுயமாகச் செயற்படும் ஒருவன், சண்டையை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளன், படைப்பாளி, தீவிர உழைப்பாளி, என நீண்டு செல்லும் அவரது ஆளுமை பன்முகத்தன்மை வாய்ந்தது.

இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மலவரன் உட்பட 57 பேருக்கும் மற்றும் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களிற்கும் நாட்டுப்பற்றாளார்களிற்கும் நினைவஞ்சலியை செலுத்துவோம். விடுதலை வீரர்களின் சுவாசமான சுதந்திர விடுதலை என்னும் அடைவை நோக்கி தளர்வில்லாமல் ஒன்றாகப் பயணிப்போம். 

'ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது'  - தலைவர் பிரபாகரன் அவர்கள்.

அபிஷேகா

புதன், 20 பிப்ரவரி, 2019

நிலவு (கவிதைகள்) - சு. ராஜசெல்வி-


 
           நிலவு
   (கவிதைகள்)


- சு. ராஜசெல்வி-







  

(1)
வண்ண வண்ண பூச்சி
வண்ணாத்திப்பூச்சி
உண்ண உண்ண பறந்து
பூ மீது மென்மையாக இருந்து
எண்ணமெல்லாம் நிறைந்து
கள்ளமில்லாமல் அருந்தும்
தேனை கள்ளமில்லாமல் அருந்தும்
அழகு கோடி தானடா  

செந்நிறப்பூவே
மண்ணின் குமிழ் அழகே
கொள்ளை உன் அழகால்
வண்ண பூச்சிதனையும்
கொள்ளையடித்தாயே   
  
பூவும் வண்ண பூச்சியும்
இணையும் கணமே காதல்
நிலவின் ஒளியில் ஒரு கூடல்

(2)
நிலா முழுநிலா பால்நிலா
முட்டைப்பொரியலாய்
அம்மா குழைக்கும் சோற்றுருண்டையாய்
வயிறு பசிக்கையில் நீ நிறைவாய்

நிலாவே !
நீ ஒளிதந்தாலும் சுடுவதில்லை
என் தனிமையிலும் துணை இருப்பாய்
என் கவலைகளை ,கண்ணீரை
நீ அறிவாய்

நிலவாகிய பெண்ணவள்
கனவாகிய அவனவள்
கலையாகிய தாயவள்
வையகத்தின் தலைமகள் 

பெண் நிலவாகலாம்
நிலவு பெண் அல்ல
நிலவு இரவல் ஒளி
பெண் பேறு  

(3)
ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்னுத்தாயி
கூறைக்கரையின் அழகாய் வாய் சிவந்தவளே என் தாயி
என் நெஞ்சை
வாரிக்கொண்டையிட்டு போறியே சின்னத்தாயி
நாரி ஒடிந்துவிடும் மெல்ல நட அன்புத்தாயி  

ஆடு மாடு அழகெல்லாம் சூழ்ந்துவருகுது
அது எல்லாம் உன் முன் வீழ்ந்து வணங்குது
அணங்கு நீ அசைந்து அசைந்து செல்லும் அன்னம்
உன்வதனம் பூக்கும்  பூவே காதலின் சின்னம்
உந்தன் கண்கள் வானவில்லாய் மின்னும்
பண்ணும் பாட்டும் உன் வண்ணம்
 ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்னுத்தாயி

களனி எல்லாம் செழிப்பாக்கி செல்லும் தாயி
எக் கணனியுகத்திலும் நீயேதான் ராணி
என் கனவு நனவெல்லாம் உயிரே நீயே 
என் ஆயுளின் நீளம் உன் கையில் தாயே
 ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்னுத்தாயி
என் இதயத்தையும் பிடுங்கி போறாயே கண்ணுத்தாயி

   (4)
 வெள்ளைத்தாமரைகள் இடும் பூக்கோலம்
வெண்புறாக்கள் போல் நளினமிடும்
காணக் கண் இரண்டு போதாது

பௌர்ணமி நிலவில் ஒளிரும்
அகல்விளக்கு - அது
 மனங்களை வெளிச்சமிடும்
அகவிளக்கு

பார் எங்கும் திருவோணம் திருவிழா
ஊரே ஒன்றாகும் நல்விழா
காரிருள் அகழும் மனவிழா
ஆவணி மாத பெருவிழா   

(5)
 தமிழ் செந்தமிழ்
இயல் இசை நாடகம் என
விரியும்  முத்தமிழ்
என்றும்  இளமையாய்
பைந்தமிழ் 
தரணியின் மூத்தகுடியின் மொழி
தீ ,மை, வை என
ஒரு சொல்லில் பொருள் தரும்
ஒரேமொழி
உலகின் தனிமொழி
 

தித்திக்க பேசலாம்
திகட்டாமல் எழுதலாம்
தத்தி வரும் மழலையும்
பொக்குவாய் முதியோரும்
பேசும் ஓசை கேற்க வரும் வரம்

கனிவுக்கு ஒரு இதமும்
மேடைக்கு ஒரு பதமும்
கவலைக்கு ஒரு இடமும்
சினத்திற்கு ஒரு விதமும்
மகிழ்விற்கு ஒரு மோதகமாய் 
இனிக்கும் எம்தாய்மொழி
தமிழ்மொழியாம் செம்மொழி

விழிகள் இரண்டு
மொழியோ ஒன்று
அதுவே உயிரிழை என்று
போடடா சபதம் இன்று       
     
    (6)
அன்று
கண்கள் தூண்டில்களாக
இதயங்கள் சிக்கின
இன்று
தூண்டில் மீனாய் 
துடிக்கிறது "தனிமை"  

காதல்
நூலறுந்த பட்டமாயிற்று
வாழ்தல்
தீ மிதிப்பாயிற்று 

துயில் இல்லை
கனவும் இல்லை
நினைவு முழுதும் அவளே
மழை இல்லை
நனைகிறேன் கண்ணீரால்
வானில் அவள் நிலாவாய்
பூமியில்  நான்      
( 7)

  முள்ளில்லா ரோஜா
நவீன உலகில் முள் துணை அற்றும்
நிமிர்ந்து வாழும் ரோஜா

கன்னக்குழிபோல் மொட்டு முகிழ
புன்னகையாய் விரியும் ரோஜா 
பூவுலகில் ராஜா
நிறம் நிறமாய்
விதம் விதமாய்
மனம் நிறையும் அழகு
காற்றில் வாசம் கலக்க
சுற்றமே கரையும் ஈர்ப்பில்

முள்ளில்லா ரோஜாவிலும்
கள் உண்டு
கள் உண்டு மண் கவிழ்ந்த
மன்னவர்களும் உண்டு
விண் தொட்ட வறியோரும் உண்டு

இதழ்கள் ஒன்று கூடி ரோஜாவாகிறது
செக்கச் சிவந்த ரோஜா
காதலின் தூது
வெள்ளை ரோஜா
துக்க நிகழ்வில் அடைமொழி


செடியில் ரோஜாவின் ஆயுள்
பறிப்பதால் பறிபோகிறது
இருந்தும்
தேவதையின் கூந்தல் பூக்கிறது
வீடு நிறைய 

(8)
பள்ளிப்பிள்ளைகளின் கனவு
பகல்கனவோ !
எள்ளி நகையாட
எடுத்தார் கைப்பிள்ளைகளா!
புள்ளி எடுத்தும்
கல்வி இல்லையா?
துள்ளித்திரியும் வயதில்
குரல்கொடுக்கவைத்தவர்
குற்றவாளிகளா?
குரல்தந்தவர் குற்றவாளிகளா?

நீதியற்ற கைது ஒரு அடக்குமுறை
அராஜகம் வென்றதாய் வரலாறு இல்லை
சிறு துளி பெருவெள்ளம்
செய்தி பரவமுன் விடுதலை  செய் !

(9)

நிலவின் ஒளியில்

ஆற்றாமையுடன் ஆகாயம் பார்த்து
வருணபகவானை தேடுகிறான்
விவசாயி

பார்த்திருக்க நாற்றுக்கள் கருகும்
குடிசையை பட்டினிப்பூதம் ஆளும்
ஆடு மாடுகளும் அவலம் அறியும்
ஊருக்கே உணவு இட்டவன்
காதில் கேற்கும்
குழந்தைகள் அழும் சத்தம்

பசும் மரங்களை வெட்டி
கிராமங்கள் நகரங்கள் ஆயிற்று 
வாழ்வு நரகமாயிற்று


(10)
நிலவின் ஒளியில்

முதிர்க்கரங்களின் நளினம்
முற்றத்து கோலமாகிறது
எளிமை வாழ்வில்  
(மன)வலிமை பிறக்கிறது
உழைப்பு உயர்வு தருகிறது 

அள்ள அள்ளக்குறையா 
பாசக்கிணறு ஒன்று
பக்குவமாய் கோலமிட்டு
காலைச்சூரியனை அழைக்கிறது
ஓலைக்குடிசை(க்குள்) ஒளிபெற

தென்றல் தாலாட்ட
மண்வாசத்தை முகர்ந்து
பறவைகளின் இசையுடன்
இயல்புடன் வாழ்தலே
நீண்ட ஆயுளின் ()ரகசியம்      

(11)
மலரே ஒரு வார்த்தை பேசு
நிலவே புது செய்தி வீசு
விலையாய் தருவேன் உயிரை
காதலாய் ஒரு சொல் கூறு

விழியால் கதை பேசி
வலியால் துடிக்கவிடாதே
உயிரே! பழி வேண்டாம்
மௌனம் கொடிது 
இதயம் வருட
இதழ்களால் சொல்லு
"நான் உன்னை விரும்புகிறேன் "

 (12)
   யாதும் ஊரே யாவரும் கேளீர்
பூலோகம் ஒன்றே பிரிவினை மறவீர்- இருந்தும் 
தமிழே இனிமை உரக்கச்சொல்வீர்
மனிதம் வாழ கவிதை புனைவீர்

(13)

விழியே கதை எழுது
காதலை மொழியாக்கி
அதன் வழியே எழுது
உளிகொண்டு
என் இதயத்தில் சிலையாய் எழுது
பிழையாய் போனாலும்
கலையாய் அது வாழும் நீ எழுது

அழுது அழுது கருவிழி கரைந்தாலும்
நிலையில்லா வாழ்வில்
விழியே! உன் மொழி போதும்
என் ஆயுளுக்கு
விழியே கதை எழுது
உயிர் மையால் அதை எழுது

(14)
    வயலில் விளையாடியே உழைத்ததும்
ஊருக்கே உணவு தந்ததும்
அது ஒரு கனாக்காலம்
வரிசைகளில் வரம்புக்கட்டி ,
ஏர் எடுத்து உழுது , மூலை கொத்தி,   
கார்த்திகையில் நெல் விதைத்து,
அளவாக உரமிட்டு ,
ஆடல் பாடலுடன் அறுவடை செய்து ,
விடிய விடிய சூடடித்து,
உணவுக்கு நெல் வைத்து
மிகுதி விற்று
வீடு செழுமையாகும்
வாழ்வு பூ பூத்திருந்தது

நகைவிற்று,
நெல்விதைத்து , புல் பிடுங்கி ,
மழையற்று நாற்று கருகும்
வயலை ஈடுவைத்து ,
மழை பார்த்து 
நாற்று வாங்கி  மீள நட்டும்,
பூச்சிக்கு மருந்தடித்தும்,
வெள்ளம் வந்து அள்ளிப்போகும் 
அழையா விருந்தாளியாய்  வறுமை
குடிசைக்குள்  குடியேறும்
உறவுகள் ஒவ்வொன்றாய் கலற
ஊருக்கு உணவிட்டவன் வீட்டில்
கஞ்சிக்கு பெருமூச்சு
இது ஒரு கரிகாலம் 

(15)
காதல்க் கணவன்  
களத்தில் கண் மூடினான்
என் உயிர் அவனிடம்
அவன் உயிர் என்னிடம்
இறந்தது அவனா?நானா?

உறவுகள் தந்தது வெள்ளை சேலையை
சுமங்கலியில் பொட்டிழந்து விதவையானேன்
வீணையில்  அவனுக்காய் இசைக்கிறேன்
அவன் வரவில்லை
அவனிடம் நான் செல்வேன்
அதுவரை நான் இசைப்பேன்

(16)
தன்னம்பிக்கை தரணியை ஆளும்
முயன்றால் இயலாது இல்லை
நம்பி(க்)கை  கொடுங்கள்
குடிசையும் குதூகலிக்கும்
எதிர்பார்ப்பற்று ஏணியாய் இருங்கள்
மனிதநேயமே புனிதமானது

கருணையும் கல்வியும்
மனிதத்தின் இரு கண்கள்
வழங்க வழங்க
அதிகம் அதிகமாய் பெறுவோம்
மனிதரில் வேற்றுமை இல்லை
ஒற்றுமையில்
உங்கள் கையில் உலகம் 

(17)
அச்சமில்லை
எழு!
எப்படைவரினும் மிச்சமில்லை
வீரத்தை உச்சமாய் வைத்திரு
தர்மத்தில் இயங்கு
ஏழைக்கு இரங்கு
நெஞ்சுரம் கொண்டு சத்தியம் செய்
"அடிமையாய் வாழேன்" என்று
தற்கொலை தவிர்     

விடுதலைக் கவிஞனை நினை
நிமிர்ந்து நில் 
அச்சம் என்பது மடமையடா
எந்நிலைவரினும் துணிந்து செல்! வெல்! 


(18)

கொடையாளன் கோ மகன்

வரலாற்றில் கற்றேன் வள்ளல்களை
முல்லை செடிக்கு தேர் கொடுத்த பாரி
கேட்டதெல்லாம் கொடுத்த கர்ணன்
இல்லை என்று சொல்லியறியா மன்னர்
வாழ்ந்த பூமியில் - இன்று
உண்ண உணவின்றி ,
கல்வி தொடர வசதியின்றி ,
கவனிக்க ஆதரவு கரம் இன்றி
வாடும் குழந்தை முகங்கள் வந்து போகின்றன

நான் செய்த புண்ணியத்தால்
வரலாறு ஒன்றை கண்களால் பார்த்தேன்
அங்கு
அநாதை என்று யாரும் இருக்கவில்லை
பிச்சை எடுப்பவரை காணமுடியவில்லை
நோய் நொடிக்கு தேடிவரும் உதவி
லஞ்சம் இல்லை
பிரபா என்ற மன்னன்
எல்லோருக்கும்
அண்ணனாய் தம்பியாய் பிள்ளையாய் இருந்தான்

"வள்ளல் " ஆக முடியாவிடினும்
நல்ல மனிதர்களாய் வாழ்வோம்
பசித்த வயிறுகளுக்கு உணவை பங்கிடுவோம்
குருதிக்கொடை செய்வோம்
உடலுறுப்பு தானம் செய்வோம்
வள்ளல்களின் வழியில் செல்வோம்

(19)
நிலவின் ஒளியில்

கோழி குஞ்சுகளை காப்பதுபோல்
இந்த உயிருள்ள முதிசங்களை
காக்கின்றன முதியோர் இல்லங்கள்

பொத்தி வளர்த்த பிஞ்சுகள்
மனம் ஒத்து கைவிடவில்லை
தம் உறவுகளை

கடின உலகில்
நடைமுறை வாழ்வு
சிக்கி திக்குமுக்காடுவது
இரு உறவுகளுக்கும் புரியும்

இரு உறவுகளும் அழும் சத்தம்
யாருக்கு புரியும்?

(20)
     நிலவோடு நினைவுகள்
கவிதைக்கு பொய்யழகு
பெண்ணுக்கு
கண் சிமிட்டும் மொழியழகு
ஆணுக்கு
தோள்கொடுக்கும் நட்பழகு   
முதுமைக்கு
பொக்குவாய் சிரிப்பழகு
மழலைக்கு
தத்தி வரும் நடையழகு
மாதாவுக்கு
சதா நினைக்கும் பாசமழகு 
பிதாவுக்கு
மௌனமாய் இரசிக்கும் குணமழகு
குருவிற்கு
உழைப்பில் வாழும் எளிமையழகு
கவிதைக்கு மட்டுமல்ல பொய்யழகு
கள்ளனுக்கும்
      
(21)

சுழற்றும் சாட்டையில் சுழலும் உலகம்

அன்னையின் அரவணைப்பில்
கண் முன் புலர்ந்த உலகம்
தந்தையின் கண்டிப்பில்
பலதும் அறிந்த உலகம்   
நண்பர்களால்
சுற்றம் விரிந்த உலகம்
குருவால்
விண் தொட்ட உலகம்
இணையால்
காதலே உலகம்
குழந்தையால்
பூஞ்சோலையான உலகம்
அரசியல் சாட்டையால்
சுழல்கிறது உலகம்

சுழலும் உலக வேகத்தில்
நிதானிக்க முடியவில்லை
விலைவாசி ஏறுவதை
கவனிக்க முடியவில்லை
பிரிவினை விதைக்கப்படுவதால்
முகம் பார்த்து புன்னகைக்க முடியவில்லை
வேலைச்சுமை வேதனையை கூட வெளிப்படுத்த
பிள்ளைகள் முன் அழமுடியவில்லை   
சுழலும் உலகம் சுற்றுகிறது
அரசியல்வாதி விரும்பியபடி
உழலும் மனதை தேற்ற
கவிதை எழுதுகிறேன்
நான் விரும்பியபடி
சுழலும் உலகிலும்
என் கவிதையை இரசிக்கிறீர்
தேநீர் அருந்தியபடி  

அரசியல்வாதி
சுழற்றும் சாட்டையில் சுழல்கிறது உலகம்

(22)

 விளையாட்டில் கூட
தற்கொலை வேண்டாம்
வாழ் ! வாழவிடு!
உலக அதிசயம் ஏழு
அறியாத புதிர்கள் அதிகம்
அணு அணுவாய் அனுபவி
இயற்கையின் அழகு
அள்ள அள்ள குறைவதில்லை
முயலாதவனே இயலாதவன்
மகிழ்ச்சி பணத்தில் இல்லை
உன் அகத்தில் இருக்கிறது
உயிர்களை நேசி!
உள்ளங்களில் வாழ்!

 
(23)
முயற்சியே உயர்ச்சியின்
படிக்கட்டுகள்
தாஜ்மகால்
கல்லால் மட்டும் கட்டப்பட்டதல்ல
வியர்வையாலும்தான்
முயலாதவன் இயலாதவன்
முயன்றவனே சிகரம் தொட்டான்
லிங்கனும் கலாமும்
அதில் இருநட்சத்திரங்கள்
வாழ்வின் நெம்புகோல் முயற்சி
வசந்தத்தின் உரமும் அதேதான்
விதையின் முயற்சியே மரம்
குழந்தையின் முயற்சியே நடை
வெற்றியின் இரகசியம் முயற்சி
 
(24)
காற்று காவி வருகிறது
மென் மழையை சாய்வாக "சாரல்"
தூவிப்போகும் சாரலில்
மகிழ்கிறது மனது
எழுகிறது மண்வாசம்

சாரல் மழையில் நனைய
ஒரு சங்கீதம் இருக்கிறது
காதலருக்கு
ஒரு குறும்பு இருக்கிறது
சிறுவருக்கு
ஒரு ஆறுதல் இருக்கிறது
தொழிலாளிக்கு
ஒரு செய்தி இருக்கிறது
பறவைகளுக்கு

(25)

ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமேயில்லை
ஊர்முழுக்க பஞ்சமேயில்லை
போர் தொடுக்க வேண்டியதுமில்லை
சீர் கொடுக்க தேவையுமில்லை
உற்றுப்பார்! உடலில் நோயுமேயில்லை

கோழி கூவி காலை விடியும்   
காளை நடக்க வேலை தொடங்கும் 
உழவுத் தொழிலை மதி பூமி சிறக்கும்
 மாலை வேளை இல்லம் கூடி
இருளை வெல்ல விளக்கு ஏற்றுவோம்
வெல்ல வாழ்வை ஆடி பாடி மகிழ்வோம்   

நெல்மணிகள் விளையிற நிலத்தில
கண்மணிகள் அழுவது இல்லையடா
கழனிகள் பச்சையுடுத்தால்
உலகில் அதை மீறும் அழகு இல்லையடா
மனம் பொங்க ஆதவனுக்கு
நன்றியோடு பொங்குவோமடா
ஏர்முனைக்கு நேரிங்கே ஏதடா

பூமித்தாய் தந்த சொத்து
பூரித்தாய் அதை ஏத்து
விரித்தாய் உறவை சேர்த்து
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமேயில்லை 

(26)

தமிழுக்கு  உயிர் வணக்கம்
தலைமைக்கு பணிவு நிறை வணக்கம்
சபைக்கு அன்புசேர் வணக்கம்

இனிக்க இனிக்க பேசும் மொழி இருந்தும் ,
அன்பொழுகும் அன்னை இருந்தும் ,
ஊர் போற்றும் ஒழுக்க வாழ்வு இருந்தும்
நாடு இல்லாவிட்டால்
ஓடுகாலி வாழ்வே மிஞ்சும்
நாடே உயிரிலும் மேலானது
நாடு இல்லாதவன் அடிமை
அதனால் நாற்றுப்பற்றே சிறந்தது

உலகம் சுற்றும் வாலிபனுக்கும்
சந்திரனுக்கு சென்று வந்தவனுக்கும்
விஞ்ஞானத்தை கரைத்துக் குடித்தவனுக்கும்
விளையாட்டில் விண்ணனுக்கும் 
பெற்றநாடே  பொன்  நாடு
பிறந்த மண்ணே தாய்மடி
நாட்டுப்பற்றே உயிர்நாதம்  

தத்தித் திரிந்த முற்றம்
ஒட்டி உறவாடிய சுற்றம்
பட்டம்விட்ட வயல்வெளி
நீந்தி விளையாடிய குளம் 
ஊர்கூடி ஓடி விளையாடிய மைதானம்
மூளைப்பசி தீர்த்த நூலகம்
அறுக்கமுடியா உறவான பள்ளி
மறந்திடுமா சொர்க்கம் போனாலும் 

மகாத்மா , நேதாஜி, இந்திரா காந்தி,
இந்த ஆத்மாக்கள் யாவரும்
வாழ்ந்ததும், இன்றும் வாழ்வதும்
நாட்டுப்பற்றாலேயே

நாட்டுப்பற்று பொதுநலம்
நாடு வாழ , அங்கு வாழும் மக்கள் வாழ ,
அவர்தம் கலை கலாச்சாரம் வாழ ,
தாய் மொழி வாழ 
நாட்டுப்பற்று அவசியம்
நாட்டுப்பற்று அற்ற செயல் யாவும்
விழலுக்கு இறைத்த நீராகும்   

தானங்களில் சிறந்தது இரத்ததானம்
பற்றுக்களில் சிறந்தது நாட்டுப்பற்று
உலகம் கேட்க அடித்துக்கூறு 

அனைவருக்கும்
மனம் நிறைந்த நன்றிகள்

(27)
        
   காற்றுக்கு வேலியில்லை
கவிதைக்கு பாரமில்லை 
கனவுக்கு வெட்கமில்லை
கல்லுக்கு கூச்சமில்லை
காதலுக்கு கண்ணில்லை
கள்ளனுக்கு கவலையில்லை
கடவுளிடம் இரக்கமில்லை

(28)
 கனவுகள் ஆயிரம் நீ தந்தது - இன்று
நினைவுகள் பூவாய்  பூத்தது
பா-க்களில் அழகிய கருவாகி
இசைகளில் ஓசையாய்  நீ
பாடல்களில் சந்தங்கள் ஆகி
என் நெஞ்சில் மூட்டுகிறாய் தீ     
மென் பாதங்களின் ஒத்தடத்தால்
பசுமைகளை பஞ்சணை ஆக்கி 
குளிர்மையாய் தென்றலாய்
மேகத்தினுள் ஒளிந்தாய் தேவதையாய்

(29)
அது இதயத்தின் பாடல்
காடு
அது இயற்கையின் கூடல்
கவிதைக்காடு
அது வாழ்வின் தேன்

கண் நிறையும் நீர்வீழ்ச்சியாய்
உடல் தொடும் குளிர் போர்வையாய்
பாடும் பறவைகளின் இசையுமாய்
மான்களின் துள்ளல்களின் மகிழ்வாய்  
கவிதைகள் ஒன்றாகி பசுமையாய்
கவிதைக்காடு
அது மனதில் நிலாச்சோறு

(30)

சிந்தனை சிறகை அகல விரித்து
அகிலமெல்லாம் பறக்கிறேன் - மிகு
வந்தனையுடன் இறைவனை கேட்கிறேன்
அகால உயிர்பறித்தல் முறைதானோ?
அநாதையாய் வாழ்தல் துயர்தானே ?  
உயிர்கொல்லி நோய்கள் உனக்கு வரிதானே?
குறையுடன் பிறத்தல் வலிதானே? - மனிதரில்
ஏற்ற இறக்கம் சரிதானோ?
விரைவினில் இடர் அகழ் கருணையாலே

(31)

தொடுவானம் நிஜமல்ல
கானல்நீர் போலவே - எனினும்
தொடு நீ  வானம்
விடாமுயற்சியும் பயிற்சியும்
உயர்ச்சி தரும்
வானத்தில் அண்ணாந்த்து பார்த்த
சந்திரனில்
கால் பதித்தான் மனிதன்
கணணியை உருவாக்கி
அதற்குள்
உலகையே அடைத்தான் மனிதன்
உன்னையே நம்பு
முடியும் உன்னால்
தொடு நீ வானம்

(32)
 அதர்மம் கொடிது 
சூதுவாது நிரம்பியது 
துன்புறுத்தி இன்புறும் 
மனிதம் அற்றது 
தர்மம் இனிது 
அன்பால் பிறந்தது 
அறுதியும் இறுதியுமாய் 
தர்மம் வெல்லும் 

(33)
அம்மியில்  சம்பல்
  அரைச்ச கையே 
  அரைமணிக்கு  மணக்கும் 
  அந்தக்கால நினைவை
  அவிட்டுவிட்ட  படமிது
  அழுகையோட ஆசையும்
  அரையுயிராய் துடிக்குது
   அம்மாவின் நினைவுடன்

  (34)  

ஆச்சி இறந்தபின்
  தினம் அழும்
  அப்புவின்  கண்ணீர் சுடும்

  இளமையின் வறுமையில்
  இழந்த கல்வி,காதல்
  நினைக்கையில்
  கன்னம் சூடேறுகிறது
  கண்ணீரால்

  ஒரே நாளில் அகதியாகி
  விம்மி விம்மி அழுது
  வற்றிய கண்ணீரால்
  இதயம் சிவந்திருக்கிறது
  எரிதணலாய்   

  கண்ணீர் சுடும்
  கன்னத்தில் மட்டுமல்ல
   இதயத்திலும்

  (35)
ஒரு கடிதம் எழுதுகிறேன்

அம்மா!
என்னால் முடியவில்லை
சதா வேலை
தாமதம் ஆகின
திட்டு கேலி
சிலநேரம் அடி
அரைவயிறு உணவு
ஓய்வு இல்லை
வருவோர் போவோருக்கு
"வேலைக்காரன்" அறிமுகம்

அப்பா இல்லை
பள்ளி போகமுடியவில்லை
பரவாயில்லை
உடன்பிறப்புகள் வாழும் 
அம்மா!
என்கவலை அறியாமல் இரு
கடிதத்தை கிழித்துவிடுகிறேன்

(36)

நிலவோடு நினைவுகள்

மனிதவாழ்வின்  சக்கரம்
உணவல்ல  பணமல்ல
சுதந்திரம்

நினைத்ததை பேசவும் - மனம்
விரும்பியதை எழுதவும்
பச்சை வயலை இரசிக்கவும்
நீலக்கடலில் குளிக்கவும்
யாவரும் சமனென வாழும்
உரிமை வேண்டும்
மனிதனை மனிதனாய்
மதிக்கும் மனிதம் வேண்டும்


காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன கூலி
பூமிக்கேன் விழி
ஆதவனுக்கேன்  ஒளி 

(37)
குறுங்காட்டில் மலர்த்திரைபோல்
 என் மனக்கூட்டில் நீ அசைகிறாய் 
  அருள் தந்து இறைவன் இருப்பது போல்
   உரு மறைந்து என் உயிரில்  இசைக்கிறாய் 
       பனிப்படலம் ஆதவனால் கலைவது போல்
        என் மேனி தொட்டு கனவோடு ஒளிக்கிறாய்
       கவிதையாய் பூங்காற்றில் தவள்பவளே !
       காதலாய் சிறை உடைத்து வா!
       குளிர் நிலவு  குடை பிடிக்க
       அருவிகளின் சலசலப்பில் அருகில் வா!

       (38)
    தலைக்கனம்
      தலை கீழாய் வீழ்த்தும்

      வெற்றியில் எளிமையே 
      போற்றும் அறிவின் செழுமை

      கலாம் பண்பின் சிகரம்
      காந்தி விடுதலையின் அகரம் - இவர்
      தற்பெருமை அற்ற பாரத முத்துக்கள்

      (39)
 முயற்சியே உயர்ச்சியின் முதல் படி 
இயற்கையின் அதிசயங்களை கரைத்து குடி 
வியர்வைவர உழைப்பெடுத்து வாழ்வை நீடி
மகிழ்வினை நிலையாக்கு ஒன்று கூடி





       (40)

  காதல் , உயிர்களை இணைக்கும்
புலப்படாத இழை - உள்ளத்தை அள்ளித்தா என
தாலாட்டும் தென்றல் - இனமில்லை மதமில்லை சாவில்லை
அன்பாய் பொழியும் மழை 

(41)

     

 
இரு காந்தப்புள்ளிகள் 
ஈர்க்கும் கோடு
காதல் 
இரு புள்ளிகளும் 
ஒன்றாகி ஒருபுள்ளியாகும்
திருமணம் 
ஒருபுள்ளியின் பலம் 
காந்தப்புலமாகி பெருவட்டமாகும்
 குடும்பம் 
ஈர்ப்பு குறைய 
திசைமாறும் புள்ளிகள்
விவாகரத்து


(42)
   தேர்தல் 
   மழைக்காலத்து காளான் 
   தேர்வு எழுதாதவனும் 
   தேறலாம் - எனினும் 
   மறைவில் தகுதி 
   எழுதாத சட்டமாய்

   தேர்தல் மக்கள் கையில் 
   எனினும் 
   மக்கள் மாயவலையில் 
   தேர்தல் வரும் போகும் 
   ஒரு மயக்க கனவுபோல 

   தேர்தல் ஒரு திருவிழா 
   இருள் ஊர்களிலும் ஒளிவிழா 
   பந்தயக்குதிரைகள் பார்வைக்கு வரும் 
   சங்கீதக்கதிரையில்  வெல்பவர் யார்?
   உறுதிமொழிகள் ஊரை உலுப்பும் 
   திருவிழா  முடிய வழமைக்கு திரும்பும் 
   வென்றவர் சென்றவர்தான்   
   
   தியாகியும் தேர்தலில் 
   கேடியும் தேர்தலில் 
   சிலநேர முடிபுகளில்
   மனிதனுக்கு வெட்கமில்லை 
   
   தேர்தல் சனநாயகத்தின் முதல்படி 
   குழப்படிகாரன் 
   செப்படிவித்தை செய்யாதவரை 
   பணம் மது மதியை வெல்லாதவரை

    கறையான் புற்றிலும் 
    நாகம் இருப்பினும் 
    தேர்தல் 
    நல்ல தேர்வு 
    மக்களை மக்கள் ஆள
    சர்வாதிகாரம் சாக 
    மக்கள் மனநிலை அறிய 
    தேர்தலே வருக !


(43)
    வரம்பு வயலில் ஒய்யார இருப்பு 
    பிரம்பு கொண்டு கலைக்குதடி என்னை 
    சிலை கூட தோற்கும் அழகு 
    கலை வடியும் உன்முகம் மெழுகு 
    பெண்ணே! தென்றலில் அசையும் பூவே!
    கண்ணே! என்கனவையும் களவாடும் மானே!
    பச்சை வயல் கனவில் - தினம் 
    வாழும்  என் மாமா வீட்டுக்குயிலே!


(44)

ஒரு நடுச்சாமத்தில்  
உடுத்த உடையுடன் 
எடுத்த பொருளுடன் 
எடுத்தோம் ஓட்டம் 
படுத்த  படுக்கையாய் இருந்த 
ஆச்சியை கைவிடுத்து 
நெஞ்சு படபடக்க 
அடுத்த ஊரும் தாண்டி 
நிலவே நீ சாட்சி 
நீ அறிவாய் பூரணமாய் 

தலையில் சுமை தான் - இருந்தும் 
அருகில்  இமைகளாய் இரு இளசுகள்  



(45)

வெண்ணிலவே வா மண்ணிறங்கி வா 
  உன்னோடு சமாதானம் கொண்டு வா 
  வெண்ணுள்ளம் தந்து விண்ணுக்கு போ 
  கண்குளிர எம் மனக்காயம் ஆற்றிப்போ


(46)
சுள்ளித்தடிகளாய் 

மனதினில் கலவரம் 

பெரு விருட்சங்களாய் 

சாதி, மதம், இனம் என நீளும் 

பலவகை கலவரம் 



கலவரம் வீரமல்ல 

பேடிகளின் கூத்து 

ஆதிக்க பேய்களின் 

பின் விளையாட்டு 

சகமனிதனின் துன்பத்தில் 

குளிக்கும் மனப்பிறழ்வு   



மனிதனே!

உளவுரத்தை கூட்டு 

நிலவரத்தை மாற்று 

மனிதமே வரம் 

புனிதத்தை நிலைநாட்டு 

பகுத்தறிவை பற்றவைக்காதே 

கலவரம் சிலநாட்கள் 

வடு ஆயுள்வரை 



மன்னிப்பே மருந்து 

வரலாறு சபிக்க 

தீயவர் நாணி சாவர்  

அன்பே மேல் 

மொழி,நிறம்,மதம் கடந்து 

மனிதனில் மாண்பு காண்!

கலவரத்திலும்  விளம்பரமா 
வியாபாரம் போதும் 
எரிவது  ஏதுமறியா  உயிர்களும் 
நீள்கால உழைப்பும் மட்டுமல்ல 
மனிதனின் ஆறறிவும்தான்
எத்தனை இளசுகளின் கனவுகள் 
கானல்நீராயிற்று  
அறிந்து வை மனிதா! 
எரியவேண்டியது
உன் அகங்காரம்தான்       

யாரும் அறிந்து பிறப்பதில்லை 

பிறந்தபின்தான் தெரியும் 

சாதி, மதம்,இனம் 

புரிந்துகொள் மனிதா!  

வாழ்வு குறுகியது 

வா மனிதா! கூடி வாழ்வோம் 

நாளும் திருவிழாவாய்



(47)
ஒரு வீரயுகம் 
கண்முன்னால் காணாமல் போயிற்று 
தரையில் தத்தளித்தன மீன்கள் 
துடுப்பிளந்தது வாழ்க்கையின் ஓடம் 
சுயநினைவு மீள யுகங்கள் போதாது 
கண்ணீரால் கழுவமுடியா குருதியே 
முள்ளிவாய்க்கால் 
இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது 
துயரத்தின் ஒலி

48, பூனையார் பூனையார்

எலி பிடிக்கும் பூனையார்

பதுங்கிப்பதுங்கி  எலி பிடிக்கும் பூனையார் 

எலிகள் எல்லாம் சேர்ந்தன 

திட்டம் ஒன்று போட்டன 

பூனையார் கழுத்தில் மணிகட்டினால்

பூனை வரும் சத்தத்தில் 

ஓடி நாங்கள் தப்பலாம் 

திட்டம் நல்ல திட்டம் 

எலியாருக்கு கொண்டாட்டம்

யார் பூனைக்கு மணிகட்டுவது?

எலியாருக்குள் திண்டாட்டம்  

யார் பூனைக்கு மணிகட்டுவது?

எலியாருக்குள் திண்டாட்டம்  

பூனையார் பூனையார் 

பதுங்கித்திரியும் பூனையார் 

எலியாரின் திட்டம் கேட்டு 

கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட பூனையார் 

பகிடி பார்க்க

மீயா மீயா  சத்தம் போட்ட  பூனையார்

எலியாரின் கூட்டமும் போச்சு 

அவர் போட்ட திட்டமும் போச்சு 

ஓடி ஒளித்தனர் எலியார்

பூனையார் பூனையார் 

கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட பூனையார்

 

49, அம்மம்மா அம்மம்மா 

எங்கள் உயிர் அம்மம்மா 

நித்தம் புத்தம் புது கதைகள் 

சொல்லும் அம்மம்மா 

வார்த்தைஜாலம் கோர்த்து 

வண்ண வண்ண கதைகள் 

சொல்லும் அம்மம்மா 

நிலாக்காட்டி சோறு ஊட்டி 

எம் சின்ன வயிறு நிரப்பும்  அம்மம்மா

எம் ஆசை அம்மம்மா 

எம் அம்மாவோடு கூடயிருந்து 

எம்மை வளர்த்த அம்மம்மா 

எம்மை யாரும் உறுக்கிவந்தால் 

அடைக்கலம் தரும் அம்மம்மா

அன்பாக அரவணைத்து 

,ஆவன்னா சொல்லித்தரும்  அம்மம்மா 

கடைக்கு கூட்டிப்போய் 

கலர் கலராய்  மிட்டாய் வாங்கித்தரும்  அம்மம்மா 

சட்டி மீது சட்டி வைத்து 

அப்பம் சுட்டுத்தரும் அம்மம்மா 

நாம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க 

பார்த்து மகிழ்ந்த அம்மம்மா 

பட்டம் போல் நாம் பறக்க 

நூலாய் இருந்த அம்மம்மா   

 50,

மயிலே மயிலே ஆடிவா 

மழை வரப்போகுது ஆடிவா

தோகை விரித்தபடி ஆடிவா   

முடிந்தால் முருகனையும் ஏற்றிவா 

கிளியே கிளியே பறந்துவா 

கொந்தல் பழங்கள் நான்தருவேன் 

கொண்டைக்கிளியே பறந்துவா 

கீ கீ என்றே பறந்துவா 

குயிலே குயிலே பாடிவா 

தேனிசையாய் பாடிவா 

மயிலார் உண்டு நடனமாட  

குயிலே குயிலே பாடிவா 

புறாவே புறாவே இறங்கிவா 

கரணம் அடித்து இறங்கிவா 

தானியம் நிறைய நான் தருவேன் 

தகவல் ஒன்று சொல்லிவிடு 

அம்மம்மாவிடம்  தகவல் ஒன்று சொல்லிவிடு 

 

51, பள்ளி செல்லும் சிறுவர் நாம் 

கருத்தாய் கல்வி கற்றிடுவோம்  

சீரும் சிறப்பும் நாம் பெற்று

நாடு செழிக்க உழைத்திடுவோம் 

பாரில் நிறைய விடயமுண்டு 

பகுத்து அறிய பள்ளி செல்வோம்  

சிறுவர் நாம் பள்ளி செல்வோம் 

துள்ளித்துள்ளிபள்ளி செல்வோம்

உடலும் உளமும் வளரவே 

ஓடி ஆடி விளையாடுவோம் 

பள்ளித்தோழர் கூடவே 

ஆடிப்பாடி விளையாடுவோம் 

பள்ளிக்கூடம்  அது கல்வித்தேட்டம் 

பயன்தரு பலன்கள் அள்ளித்தரும் தோட்டம்  

 

52, மழையே மழையே வா வா வா 

குளிர்மை நிறைய  தா தா தா 

மின்னலாய் புன்னகைக்கும் 

மழையே மழையே  வா வா வா 

இடியாய் இடித்து உறுமி

மழையே மழையே  வா வா வா 

மாரி மழையைப்பார்த்து 

தவளையார் இருப்பார்  வா வா வா

மழையே மழையே  வா வா வா 

தோகைவிரித்து மயிலார் ஆடுவார் 

மழையே மழையே  வா வா வா 

மெதுவாய் மெதுவாய்  பெய்

மழையே! ஏழைக்குடிசை  மீது  மெதுவாய் பெய்

மழையே மழையே மழையே வா வா வா 

 

53, அன்னை ஓர் ஆலயம்

இல்லாதவருக்கு உதவு 

ஈயையும் கொல்லாதே 

உண்மையே பேசு 

ஊரோடு சேர்ந்திரு 

எண்ணத்தில் தூய்மையாய் இரு

ஏணியாய் வாழ் 

ஐயம் தீர கல் 

ஒழுக்கமே உயர்வு 

ஓரணியில் நில் 

ஔவையின் ஆயுள் பெறு                                       

அஃறினையையும் மதி