சனி, 24 செப்டம்பர், 2022

செல்லையா செல்வரத்தினம்

 செல்லையா செல்வரத்தினம் ஐயா


புதுமுறிப்பு, கிளிநொச்சியினை சேர்ந்த ந. ஜெயக்குமார் ஆகிய நான் கிளிநொச்சி கரடிபோக்கில் வசிக்கும் செல்லையா செல்வரத்தினம் ஐயா அவர்கள் சுகயீனமுற்று இருப்பதை அறிந்து அவர் வீடு சென்றேன். அவர் எனக்கு எனது குடும்பத்திற்கு அந்நாளில் செய்த உதவிகளை நினைவில்கொண்டு அங்கு சென்றிருந்தேன். ஐயா அவர்கள் தற்பொழுதிருக்கும் நிலைகண்டு வியப்புற்றேன். அப்போது எனக்கு முன்னால் அவர் செய்த சேவைகள் சில என் மனக்கண்ணில் உருண்டன.  

ஐயா அவர்கள் ஆரம்பத்தில் கணேசானந்தா ஆச்சிரமத்தில் உபதலைவராக சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் நற்பணி புரிந்தார். அங்கு ஆதரவற்ற பல குழந்தைகளை அன்போடு பராமரித்து வந்தார். இதற்காக  25 ஏக்கர் காணியினை அரசாங்கம் வழங்கியது. அக்காணியில் காட்டை  வெட்டி பெரிய கொட்டில்கள் போட்டு தென்னை ஓலைகளால் கூரைகள் வேய்ந்து அக்கொட்டில்களில் பிள்ளைகளை தங்கவைத்து கவனித்தார்கள். அப்போது அதன் தலைவராக அமரர் இராசநாயகம் ஐயா அவர்களும் செயலாளராக பொன் நித்தியானந்தம் ஐயா அவர்களும் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து அக்குழந்தைகளை பல இன்னல்களுக்கு மத்தியிலும் பண்போடும் பாசத்தோடும் வளர்த்துவந்தார். இன்று அவ் இல்லத்தில் சுமார் 212 பிள்ளைகள் நலமோடு இருந்து மகிழ்வோடு படிக்கின்றார்கள்.

ஐயா அவர்கள் கிளிநொச்சி அருள்மிகு கந்தசாமி ஆலயத்தில் நிர்வாகத்தில் செயலாளராக 1990 ஆம் ஆண்டுமுதல் கடமை புரிந்து வந்தார். தொடந்து உபதலைவராகவும்,  பதில் தலைவராகவும் நிர்வாகத்தில் தொண்டு புரிந்தார். இக்காலகட்டத்தில் திருவிழா நாட்களிலும் விசேட உபயங்களிலும் சிறப்புடன் எம்பொருமானுக்கு தொண்டாற்றினார். அத்தோடு குழுக்களாக சேர்ந்து புராணங்கள் படித்து அதன் பயன்களை கூறி வந்தார்.

கரைச்சி இந்து இளைஞர் பேரவையின் 1987 இல் இருந்து பொருளாராக கடமை புரிந்து பேரவையின் மூலம் ஆலயங்களில் தேவாரம் பண்ணுடன் பாடி புராணம் படித்து பலனும் கூறிவந்தார். அத்துடன்  உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் மிகவும் வறுமையோடு வாழ்ந்த 30 குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் வாழ்ந்த தனது மாவட்ட அன்பர்களின் உதவியை பெற்று ஒரு குடும்பத்திற்கு தலா 4000 ரூபா வழங்கி அதனூடு சிறுதானிய பயிர்ச்செய்கையை ஊக்குவித்து வறுமையை போக்க முயன்றார்.   

கிளிநொச்சி திருநெறிக்கழகத்தின் செயலாளராக பின் பொருளாளராக 1990 ஆண்டு தொடக்கம்  சேவை செய்துவந்தார். அக்காலத்தில் திருநெறிக்கழகத்தின் தலைவராக அமரர் திரு மகாலிங்கம் ஐயா அவர்கள் கடமையாற்றிவந்தார். இருவரும் சேர்ந்து திருநெறிக்கழகத்தை  மென்மேலும் வளர்த்தனர். ஒவ்வொரு வருடமும் கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் பாடசாலைகளில் சமய பாட பரிட்சைகளை நடாத்தி வெற்றிபெறும் மாணவருக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர். அத்தோடு திருவாசகம் முற்றோதலை, புராணம் படிப்பதை, சமய குரவர்களின் குருபூசை தினங்களை சிறப்புடன்ஆலயங்களில் செய்துவந்தனர்.

கந்தபுரம் இத்தியடி அம்மன் ஆலயம்,  கந்தபுரம் முருகன் ஆலயம் என்பவற்றில் ஆலய நிர்வாகத்தினருக்கு  ஆலோசகராக இருந்தார். அக்காலத்தில் இத்தியடி அம்மன் ஆலய தலைவராக திரு சம்மந்தர் ஐயாவும் முருகன் ஆலய தலைவராக திரு சின்னத்தம்பி ஐயாவும் இருந்தனர்.

உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலயத்தில் நிர்வாக உறுப்பினராக பல ஆண்டுகள் பணி புரியும் பாக்கியம் பெற்றிருந்தார். அக்காலத்தில் கோயில் தலைவராக திரு இராசநாயகம் ஐயா அவர்களும்  செயலாளராக திரு பொன் நித்தியானந்தம்  ஐயா அவர்களும் இருந்தனர்.  அந்தகாலத்திலே இவ் ஆலயத்தை கிளி மாவடட ஆலயமாக மாற்றினார்கள் , அதன் பின்னர் ஐயா அவர்கள் கிளிநகர அங்கத்தவராக நியமிக்கப்பட்டு பல பணிகளை செய்துவந்தார்.  

கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினராக சுமார் நான்கு வருடங்கள் கடமை புரிந்தார். அக்காலத்தில் வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் தலைவராக டொக்டர் விக்கினேஸ்வரன் அவர்கள் கடமையாற்றினார். 

 செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையின் நிர்வாகக்குழு உறுப்பினராக கடமை புரிந்தார். அக்காலம் யுத்தகாலம் என்பதால்  செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு இன்றியமையாததாக இருந்தது. இக்காலத்தில் கிளிநொச்சிக்கிளையின் செஞ்சிலுவைச் சங்க தலைவராக திரு பொன் விநாயகமூர்த்தி அவர்களும் செயலாளராக திரு குணரத்தினம் அவர்களும் கடமை செய்தனர்.  

கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கரடிப்போக்கு ,பெரியப்பரந்தன் பகுதியின் ஆட்சிக்குழு உறுப்பினராக சுமார் ஆறு ஆண்டுகள் கடமையாற்றினார். அந்தக்காலம் போர் காலம் என்பதால் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணி அளப்பரியது .

வன்னேரிக்குளத்தில் அமைந்திருந்த முதியோர் இல்லத்தில் 1992 ஆம் ஆண்டு  தொடக்கம் நிர்வாககுழு  உறுப்பினராக பல ஆண்டுகள்  கடமையாற்றினார். அந்தக்காலத்தில் முதியோர் இல்ல தலைவராக அமரர் திரு கந்தசாமி ஐயா அவர்கள் இருந்தார். இவர்கள் எல்லோரும் இணைந்து முதியோர் இல்லத்தை திறம்பட நடத்தினர். 

1980 ஆம் ஆண்டளவில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில்      பணிபுரிபவர்களின் பிள்ளைகளின் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சங்கத்தின் பொருளாளராக ஐயா அவர்கள் கடமை புரிந்துள்ளார். சங்கத்தின் தலைவராக அமரர் திரு தியாகராஜா அவர்கள் இருந்தார்.

கிளிநொச்சி கல்வித்திணைக்களத்தின் முறைசாராக் கல்விப்பிரிவில் மின் இணைப்பு போதனாசிரியராய் கடமையாற்றினார். மேலும் தனிப்பட்டமுறையில் சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மின் இணைப்பு பற்றிய கல்வியை கற்பித்தார், தொடர்ந்து ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். அவர்களில் சிலர் யுத்தகாலத்தில் சிறந்த மின் இணைப்பாளர்களாய் இருந்திருக்கிறார்கள், சிலர் வெளிநாடுகளில் தொழில் செய்கிறார்கள்.    

ஐயாவால் மேலும் நற்பணிகளை செய்யமுடியாவிலேயே ! என்ற ஏக்கத்துடன் நான் மீண்டும் அவரை நோக்கினேன் .


ந. ஜெயக்குமார்

        (2018)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக