ஞாயிறு, 19 அக்டோபர், 2025

எழுத்தாளர், மாவீரர் கப்டன் மலரவன்

மலரவன் (1972–1992)[2] என்பவர் ஒரு ஈழத்து எழுத்தாளர். இவரது கதைகள், கவிதைகள் கொண்ட நான்கு புத்தகங்கள் வட இலங்கையில் வெளிவந்திருந்தன. இவரது போர் உலா என்ற நினைவுக் குறிப்புக்காக மிகவும் பிரபலமானவர், இது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு War Journey: Diary of a Tamil Tiger என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் நயினாதீவை பூர்வீகமாய் கொண்ட காலஞ்சென்ற முத்துக்குமாரு காசிப்பிள்ளை ( மரபுவழி அறங்காவலர், தலைவர் - நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்) அவர்களின் பூட்டன், காலஞ்சென்ற கா.பொன்னம்பலம் (பதிவுபெற்ற ஒப்பந்ததாரர் ) அவர்களின் பேரன்,காலஞ்சென்ற பொ. காசிலிங்கம் ( பதிவுபெற்ற ஆங்கில, ஆயுர்வேத மருத்துவர். மூத்த களமருத்துவர்), எழுத்தாளர் மலரன்னை ஆகியோரின் இளையமகன் மற்றும் மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் தாய்வழி பேரன். இவர் 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். புலிகள் இயக்கத்தில் செயல்பட்டபோது, இவர் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், பின்னர் அது இவரது புத்தகமான போர் உலா நூலின் அடிப்படையாக இருந்தது. இவர் பசீலன் மோட்டார் படைப்பிரிவின் துணைப்பொறுப்பாளராவும் பின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார் , 1992 ஆம் ஆண்டில் நடந்த போரில் உயிர் துறந்தார். இவரது படைப்புகள் விடுதலைப் புலியாகப் போரில் மலரவனின் அனுபவங்களான போர் உலா நூல் இவர் இறந்த அடுத்த ஆண்டு வெளியானது.[4] இந்த புத்தகம் இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல் பரிசு பெற்றது. இதுவரை தாயகத்திலும் பிறநாடுகளிலுமாக ஐந்து பதிப்புகளைப் பெற்றுள்ளது. தாயகத்திலும் வெளிநாட்டிலும் பல்வேறு பத்திரிகைகளில் தொடராக மீள்பிரசுரமாகியிருக்கிறது. (யாழ்) உதயன் ஞாயிறு சஞ்சிகையில் தொடராக மீள்பிரசுரமாகியதும் குறிப்பிடப்படவேண்டியது. "போர் உலா " தொடர் நாடகமாகவும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. காட்டூன் வடிவிலும் பிரசுரமாகியுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பை war journey என்ற பெயரில் கலாநிதி என். மாலதி மொழிபெயர்த்தார். பென்குயின் வெளியீட்டாளர்களால் war journey வெளியிடப்பட்டது. இவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, மலரவனின் ஹைக்கூ கவிதைகள் என்ற ஹைக்கூ தொகுப்பு நூல் 1998 இல் வெளியானது. அந்த ஆண்டு இவரது சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு (என் கல்லறையில் தூவுங்கள்) வெளியிடப்பட்டது. இவரது புதினமான புயல் பறவை 2003 இல் வெளியானது. வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது . இந்த புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு 2015 இல் இந்தியாவில் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவ ரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக